என்னைத் தொடாதே

என்னைத் தொடாதே என்று என் மனைவி கூறுகிறாள்.  

இனிமேல் சிவனே என்று இருந்துவிடுகிறேன். 

சிதம்பரத்தில் வாழ்ந்த அந்தக் குயவன் இப்படித் தீர்மானித்தான்.

ஏன் அவள் இப்படிச் சொன்னாள்

நான் இன்னொருத்தியோடு இருந்தது தப்புதான். இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன் என்று கெஞ்சுகிறேன். அவள் கேட்கவில்லை.

சரி போகட்டும், ஆறப்போட்டால் எல்லாம் சரியாய்விடும் என்று எண்ணினேன். "திருநீலகண்டம்" என்று அவள் சாமி பெயரைச் சொல்லி சத்தியம் செய்து தொடக்கூடாது என்று சொல்லிவிட்டாளே.  

குயவன் தன்னை நொந்துகொண்டான். 

0

மனைவி கணவனைத் தொடாமல் கணவனுக்கு வேண்டிய பணிவிடை அனைத்தையும் செய்துவந்தார்.

தங்களுக்குள் உடல் உறவு இல்லாமை அயலாருக்குத் தெரியாவண்ணம் இருவரும் வாழ்ந்துவந்தனர்.

இளமையிலிருந்தே இப்படி வாழ்ந்தவர்கள் முதுமையும் அடைந்தனர். என்றாலும் சிவன்பால் கொண்ட அன்பு குறையாமல் வாழ்ந்துவந்தனர்.

0

இருவரும் சிவனிடம் கொண்டிருந்த அன்பினை விளக்கும் வகையில், சிவன் யோகி வடிவம் தாங்கி அவர்களிடம் வந்தார்.

கோவணம் கட்டிக்கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு பூணூல் அணிந்துகொண்டு வந்தார்.

சிவன் தன் செஞ்சடையை மறைத்துப் பம்பைத் தலையுடன் வந்தார்.

புன்னகை பூத்த முகத்துடன் வந்தார்.

பிச்சை வாங்கும் பாத்திரம் ஒன்றைக் கையில் ஏந்திக்கொண்டு வந்தார்.

குயவர் மனைக்கு வந்தார்.

0

சிவயோக நாதரைக் கண்ட குயவர் அவரைச் சிவபெருமானின் புண்ணியத் தொண்டர் என்று எண்ணி எதிர்கொண்டு வரவேற்றார்.

முறையோடு பூசை செய்து வழிபட்டார்.

நான் தங்களுக்குச் செய்யவேண்டிய பணி யாது என வினவினார்.

0

இந்தத் திருவோட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்து நான் வேண்டும்போது தரவேண்டும் என்று சிவயோகி கூறினார்.

இந்த ஓடு வைத்திருப்பவரைத் தூய்மையாக்கும். பொன்னைக் காட்டிலும், மணியைக் காட்டிலும் போற்றவேண்டிய என்று கூறினார்.

குயவர் திருவோட்டைப் பெற்று, தன் வீட்டில் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு யோகியிடம் வந்தார்.

0

பின்னர் வீட்டை விட்டு நீங்கும் யோகியாரைப் பின்தொடர்ந்து சென்றார்.

அவரை வழியனுப்பி, அவரிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டார்.

நீண்ட நாள் ஆயிற்று.

0

சிவபெருமான் குயவர் வைத்திருந்த ஓட்டை அந்த இடத்திலிருந்து மறையும்படிச் செய்துவிட்டார்.

பின்னர் குயவர் வீட்டுக்கு வந்தார்.

குயவர் முன்பு போல் வரவேற்றார்.

முன்பு நான் உன்னிடம் தந்த திருவோட்டினைத் திருப்பித் தருக என்று அந்த யோகி கேட்டார்.

0

குயவர் வைத்த இடத்தில் திருவோட்டைத் தேடினார்.

திருவோடு காணவில்லை.

திரும்பி வந்து சொல்வதறியாமல் திகைத்துக்கொண்டு நின்றார்.

0

உள்ளே சென்றுவிட்டுக் கணப்பொழுதில் திரும்பிவந்து நிற்கிறாய். என் திருவோட்டைத் தரக் காலம் தாழ்த்துகிறாய். ஏன் என்று யோகி வினவினார்.

குயவர் சொல்கிறார்.

0

தேடினேன், காணவில்லை. காணாமல் போனது மிகவும் பழையது. அதைக்காட்டிலும் புதிய நல்ல பாத்திரம் தருகிறேன். என் பிழையைப் பொறுக்க வேண்டும் – என்று குயவர் கூறினார்.

0

நான் கொடுத்த மண் ஓடு அல்லாமல் பொன்னால் செய்த ஓடு கொடுத்தாலும் வாங்கமாட்டேன். நான் கொடுத்த ஓட்டையே கொண்டுவா – என்றார் யோகி.

தாங்கள் தந்தது காணாமல் போனதால் அதனினும் சிறந்தது தருகிறேன் என்கிறேன். தாங்கள் ஒப்பாமல் சினம் கொள்கிறீர்கள். என்ன செய்வேன் – என்று குயவர் கூறினார்.

அடைக்கலப் பொருளை மறைக்கும் பாவம் செய்கிறாய். உன்னை பலர் முன் காட்டாமல் விடமாட்டேன். என்றார் யோகி.

0

அந்தத் திருவோட்டைத் திருடவில்லை. திருடவேண்டும் என்று நினைத்ததுகூட இல்லை. நீரோ திருடினேன் என்கிறீர். என்ன செய்வேன் – என்று குயவர் வினவினார்.

0

அப்படியானால் உன் மகனைக் கையில் பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கிய பின்னர் புது ஓட்டைத் தா. பெற்றுக்கொள்கிறேன் – என்றார் யோகி.

ஐயரே, எனக்கு மகன் இல்லையே – என்றார் குயவர்.

அப்படியானால், உன் மனைவியைப் பற்றிக்கொண்டு செய் – என்றார் சிவமறையவர்.

எங்களுக்குள் ஒரு சபதம். ஆதலால் என் மனைவியைப் பற்ற இயலாது. நான் மட்டும் மூழ்கித் தருகிறேன் வாருங்கள் - என்றார் குயவர்.

0

தந்த ஓட்டைத் தராமலும், மனைவியைப் பற்றி மூழ்காமலும் வல்லடி வழக்கு பேசுகிறாய். இதனைத் தில்லைவாழ் அந்தணர் அவையில் சொல்லுவேன் என்றார் சிவ மறையவர்.

0

தில்லை வாழ் அந்தணர் அவையில் வழக்கு முன்வைக்கப்பட்டது.

0

இந்தக் குயவனிடம் அடைக்கலமாக நான் வைத்த பாத்திரத்தைத் திருப்பித் தராமலும், அதற்கு மாற்றாக நான் சொன்னபடி தன் மனைவி கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கித் தராமலும் வல்லடி வழக்கு செய்கிறான் – என்று யோகி தன் வழக்கினை முன்வைத்ததார்.

குயவருக்கு அவையோர் எடுத்துக் கூறுங்கள் என்றார்.

இவர் தந்த ஓடு வைத்திருந்த இடத்தில் காணவில்லை. என்ன செய்வேன், என்றார் குயவர்.

மனைவி கையைப் பிடித்துக்கொண்டு குளத்தில் மூழ்கி எழவேண்டும் என்று அவையோர் தீர்ப்பு வழங்கினர்.

0

தன் மனைவியைத் தொடாமல் இருப்பதை அவையில் வெளிக்காட்டாமல் “பொருந்தும் வகையால் பிடித்துக்கொண்டு மூழ்கித் தருகிறேன்” என்றார் குயவர்.

0

திருப்புலீச்சுரம் கோயில் குளத்தில் ஒரு மூங்கில் குச்சியின் இருவேறு முனைகளையும் தானும் தன் மனைவியும் பற்றிக்கொண்டு குயவர் இறங்கினார்.

0

மனைவியின் கையைப் பற்றிக்கொண்டு மூழ்கி எழவேண்டும் என்று வேதியர் கூறினார். குயவர் அவ்வாறே பற்றிக்கொண்டு மூழ்கி எழுந்தார்.

மூழ்கி எழுந்தவர் முதுமை நீங்கி இளமைக் கோலத்துடன் கரையேறினர்.

இளமைக் கோலத்துடன் அவர்களைக் கண்டவர்கள் வேதியரைக் காண முடியவில்லை. 

சிவபெருமான் தன் உமையம்மையுடன் காளைமீது காட்சி தந்தார்.

அனைவரும் சிவபெருமானைத் தொழுதனர்.

என்றும் இந்த இளமைக் கோலத்துடன் இருப்பீர்களாக என்று சிவபெருமானும் தேவர்களும் குயவரையும் அவரது மனைவியையும் வாழ்த்தினர்.

இருவரும் இளமைக் கோலத்திடன் சிவலோகம் சென்று வாழ்ந்தனர்.


Comments

Popular posts from this blog

ஆறாமலேயே ஆறிவிட்டது

என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்

இந்த மாதிரி மக்களுக்கு