ஆறாமலேயே ஆறிவிட்டது
என் தலையைவிட உயரமானது என் கைத்தடி. அதனை ஊன்றிக்கொண்டு நடந்து சென்றுகொண்டிந்தேன். எனக்கு வேண்டிய அளவு என்னிடம் செல்வம் உள்ளது. பிறருக்கும் அவ்வப்போது உதவி செய்து வந்தேன்.
அன்று என் கையில் பணம் இல்லை. அது வெளியூர். என்னைத் தெரிந்தவர் அங்கு யாரும் இல்லை.
வயிறு கேட்குமா? பசித்தது.
ஒற்றையடிப் பாதை. அந்த வழியில் பலர் சென்றனர். சிலர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
சோறு, பூசனிக்காய்க் குளம்பு, பறங்கிக்காய்க் கூட்டு, ரசம் நன்றாக இருக்கிறது. மோரில்தான் கொஞ்சம் கூடுதலாகத் தண்ணிர் - என்று ஒருவர் வேறொருவரிடம் சொன்னதைக் கேட்டேன்.
அது அன்னதானம் செய்யும் சத்திரமாம். ஏழை எளியவர்களுக்கு வயிறு நிறையச் சோறு போடுவார்களாம்.
அப்பாடா
பசி தீர்ந்துவிடும்
தெம்பு வந்துவிட்டது
ஏழெட்டு பேர் சென்றோம். அங்குத் தெரிந்த வாசல் வழியே நுழைந்தோம்.
வாயிலில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
அந்தச் சத்திரத்தில் 20 பேர் வரையில்தான் உட்கார்ந்து சாப்பிட முடியும்.
உள்ளே சாப்பிடுபவர் வெளியில் வந்த பிறகுதான் வெளியில் இருப்பவர்களை உள்ளே அனுப்புவார்கள். இதனை ஒழுங்குபடுத்தவே அவர் அந்த வாயிலில் நின்றுகொண்டிருந்தார்.
எனக்கு முன் சென்ற குண்டர் ஒருவர் உள்ளே நுழைந்துவிட்டார். அடுத்து, தடியை ஊன்றிக்கொண்டு நான் நின்றேன்.
"ஐயா! இது வெளியில் வரும் வழி. உள்ளே நுழையும் அந்த வாசல் வழியாக வாருங்கள்"
"ஐயா! எனக்கு வயசு 93. வேலிக்கு வெளியே சென்று சுற்றிக்கொண்டு வரவேண்டும். களைப்பாக இருக்கிறது. கருணை காட்டுங்கள்" - கெஞ்சினேன்.
அவர் மனம் இரங்கவில்லை.
என்னையும் எனக்குப் பின் நின்றவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டார்.
தண்டுமுண்டு காரனுக்கு ஒரு நீதி. தள்ளாத கிழவனுக்கு ஒரு நீதி.
என்ன உலகமடா இது?
நாங்கள் வெளியே சென்று வேலியைச் சுற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.
அங்கே யாரும் தடுக்கவில்லை.
என் தடியை எனக்குப் பின்பக்கம் வைத்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தேன்.
ஒருவர் என்னிடம் வந்தார். என் தடியை எடுத்து என் கையில் கொடுத்தார்.
"இந்த மடத்தின் தலைவர் உங்களை மட்டும் அழைத்துவரச் சொன்னார்" என்றார்.
என்னைப்பற்றி மடத்தின் தலைவருக்குத் தெரியும்போலும் - என்று எண்ணிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தேன்.
தலைவரைக் கண்டேன்.
நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இது ஏழைகள் சாப்பிடும் சத்திரம்.
பணக்காரர் ஒருவர் சாப்பிட்டு ஏழை ஒருவனுக்கு உணவு இல்லாமல் செய்துவிடக் கூடாது - என்று அறிவுரை கூறினார்.
அவர் சொன்னதில் தப்பு ஒன்றும் இல்லை.
ஆனால்
என் பசி
ஆறாமலேயே ஆறிவிட்டது.
0
Comments
Post a Comment