களாப்பழம் பறிக்கும்பபோது
பச்சைமலையில் 32 ஊர்கள். அவற்றை வன்னாடு என்று கூறுவர்.
சங்க இலக்கியங்கள் நிலத்தை வன்னிலம் என்றும் மென்னிலம் என்றும் பாகுபடுத்துகின்றன.
உழுது பயிரிடும் நிலம் மென்னிலம்.
உழ முடியாமல் பாறை இடுக்குகளில் உள்ள மண்ணைக் கொத்திப் பயிரிடும் நிலம் வன்னிலம்.
வன்னிலங்களைக் கொண்ட நாடு வன்னாடு.
0
முருகன் நிலப்புறத்தில் பயிர்த்தொழில் செய்து வாழ்ந்துவந்தான்.
அந்த மலையில் வாழ்பவர்களை நிலப்புறத்தார் மலையாளத்தான், மலையாளச்சி என்று குறிப்பிடுவது வழக்கம்.
அந்தக் காலத்தில், எனக்குத் தெரிந்து 60 ஆண்டுளுக்கு முன்பு, மலையாளத்தான் இடுப்பில் கோவணம் கட்டியிருப்பான். 4 முழ வேட்டியைத் தலையில் கட்டியிருப்பான்.
மலையாளச்சி இடுப்பில் சேலைத்துணி கட்டியிருப்பாள். அதைத் தவிர வேறு எந்தத் துணியையும் அவர்கள் மேலே போட்டுக்கொள்ள மாட்டாள். அவர்களின் நாட்டுக் கட்டுப்பாடு அது.
முலை முட்டும் பருவப் பெண்ணும் அப்படித்தான்.
0
முருகனுக்குக் கலப்பைக் கட்டை வேண்டும். கட்டை கொண்டுவந்தால் தச்சன் கலப்பை செய்து தருவான்.
தச்சனுக்குக் கூலி தரப்படுவதில்லை. தச்சனுக்கு வேலை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஊரிலுள்ள ஒவ்வொரு உழவர் குடும்பமும் ஆண்டுக்கு ஒருமுறை 4 மரக்கால், (8 வள்ளம், 32 லிட்டர்) நெல் தச்சனுக்கு மானியமாகக் கொடுக்கும். அரிவாள், களைக்கட்டு, மண்வெட்டி போன்றவற்றிற்கு மரத்தில் பிடி போட்டுத் தருதலும் இந்த மானியத்தில் அடங்கும்.
இப்படி, தச்சனுக்கு அவன் குடும்பத்துப் போதிய அளவு, சற்று மிகுதியாகவே நெல் கிடைத்துவிடும். வண்டி செய்தல், வீட்டுக்கு நிலை, கதவு செய்தல் போன்ற கைத்தொழில்களால் தச்சனுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.
கொல்லனுக்கும் அப்படித்தான். இரும்பு, கரி, உமி தந்து, துருத்தி ஊதினால் களைக்கொட்டு, அரிவாள் முதலானவற்றைக் கொல்லன் செய்து தருவான். வடித்துக் கூர்மையாக்கித் தருவான்.
0
முருகன் கலப்பை செய்யக் கட்டை கொண்டுவர மலைக்குச் சென்றான். வளைவு உள்ள கட்டைகளை மலையில் தேடிக்கொண்டிருந்தான்.
0
மலையில் களாப்பழம் பழுத்திருந்தது. அவள் களாப்பழம் பறிக்க அந்தப் பக்கம் வந்தாள்.
அவள் மலையாளச்சி. பருவப் பெண்.
வட்டமான முகம். குறுகுறுத்த பார்வை. சற்றே குள்ளம். மாம்பழ நிறம். முன்புறம் 2 பூப்பந்துகள். பந்தின் முனையில் களாப்பழம். பந்து நிமிர்ந்திருந்தது.
இடுப்பில் துண்டுத்துணி. அதனை வட்டம் என்பார்கள். அவள் வட்டம் கட்டியிருந்தாள். அது பூ போட்ட வட்டம். சங்ககாலத் தமிழ் தழை என்று குறிப்பிடுவது போல் அது இருந்தது.
0
தழையாடை என்பது இடுப்புத் துணிக்கு மேல் அணிந்து அழகுபடுத்திக்கொள்ளும் ஆடை. அது தழை, பூ கோத்துச் செய்யப்பட்டிருக்கும்.
அவள் இடுப்பில் கட்டியிருந்த வட்டம் தழையாடை போல் இருந்தது.
அவள் கக்கத்தில் புட்டி வைத்திருந்தாள். புட்டி தென்னங்கீற்றால் பின்னப்பட்டிருந்தது.
பறிக்கும் களாப்பழத்தைப் போட்டுக்கொள்வதற்காக அந்தப் புட்டி.
0
அவள் பெயர் என்னமோ அவனுக்குத் தெரியாது.
அவன் அவளுக்குச் சிட்டு என்று பெயர் வைத்துக்கொண்டான்.
அவள் பருவம் அவனைக் கட்டிப்போட்டது.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அது அவனுக்குப் பருவக் கோளாறு அன்று. பருவம் கடந்த பாலுணர்வு.
பூவைப் பார்ப்பது கண்ணுக்குக் குளிர்ச்சி அல்லவா? அவன் பார்த்தான்.
அவள் குளித்தாளோ, குளிக்கவில்லையோ தெரியவில்லை. அவள் உடம்பிலிருந்து ஒரு முரம்பு வாடை அடித்தது.
அந்த வாடை அந்தப் பெண்மீது மட்டும் அல்ல. மலையாளத்தான் உடம்பிலும் அடிக்கும்.
அந்த வாடை அவனுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் அதனை அவன் விரும்பினான்.
இது என்ன மாயம்? இதைத்தான் காமன் விளையாட்டு என்று கூறினார்கள்.
0
அண்ணா
அக்கா
அவன், அவள் குரல் கேட்டது.
மலையாளத்தான் - நாட்டுப்புறத்தான் - யார் யாரை அழைத்தாலும் அண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். வயதில் சிறியவரோ பெரியவரோ யாராய் இருந்தாலும் ‘அண்ணா’தான்.
மலையாளச்சி - நாட்டுப்புறத்தாள், ஆணோ, பெண்ணோ யாராயிருந்தாலும் அக்கா என அழைத்துப் பேசும் உறவுமுறைச் சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த வழக்கம் பழக்கமாகிவிட்டது.
0
அவன் அவளை அக்கா என்றான். அவள் அவனை அண்ணா என்றாள்.
அவன் அவளிடம் சென்றான். உயரமாக இருந்த களாச்செடியை அவளுக்கு வளைத்துக்கொடுத்தான். அவள் களாப்பழகளைப் பறித்தாள். பறித்த பழங்களில் இரண்டு மூன்றை அவ்வப்போது அவனுக்குக் கொடுத்தாள். அவன் அவற்றை வாங்கி ஒரே வாயில் போட்டுக்கொண்டான்.
அவனும் பறித்துத் தருவான். அவள் வாங்கிப் புட்டியில் போட்டுக்கொள்வாள்.
- புட்டியில் போடும் பழம் யாருக்கு
- அப்பா அம்மா அண்ணன் தம்பிக்கு
- நல்லது. அப்பா பேரு என்ன
- வெள்ளி
வெள்ளி அந்த ஊருக்குக் கவுண்டன்.
ஒவ்வொரு ஊருக்கும் கவுண்டன் என்று ஒருவரும் மூப்பன் என்று ஒருவரும் இருப்பார்கள். இது வன்னாட்டு ஊர்களில் இருக்கும் ஆட்சிமுறைமை.
அந்த ஊரில் 24 தலைக்கட்டு. தலைக்கட்டு என்றால் தலைவனைக் கொண்ட குடும்பம். ஆட்கள் ஆணும் பெண்ணுமாக 150-க்கு மேல் இருக்கும்.
இவர்களில் வயதில் மூத்த ஆண்மகனை மூப்பன் என்பர். ஊருக்கு உழைப்பவர்களில் ஒருவனைக் கவுண்டன் என்று வைத்துக்கொள்வர்.
எல்லாரும் மூப்பன் சொல்லுக்குப் கட்டுப்படுவார்கள். மூப்பன் கவுண்டனை மதித்து நடந்துகொள்வான். இது அவர்களுக்குள் இருக்கும் நடைமுறைக் கட்டுப்பாடு.
இந்தக் கட்டுப்பாட்டில் ஒன்றுதான் பெண்கள் மேல்துணி போடக்கூடாது என்பது.
0
களாப்பழம் பறிக்கும்பபோது ஒருவர் கை மற்றொருவர் மேல் படத்தானே செய்யும்
பட்டன.
சில சமயங்களில் முருகன் வேண்டுமென்றே தொடுவான். சிட்டு அவ்வளவாகக் கண்டுகொள்ளமாட்டாள். அது அவளுக்கு இன்பமாகத்தான் இருந்தது. என்றாலும் பொருட்படுத்தவில்லை. அந்தத் தொடுகைக்காக அவள் ஏங்கவும் இல்லை.
அவனுக்குத் தெரியும், வன்னாட்டுக் கட்டுப்பாடு. நிலக்காட்டான் மலையாளப் பெண்ணோடு உறவு கொண்டுவிட்டால் அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளாமல் அவனை ஊருக்குத் திருப்பி அனுப்ப மாட்டார்கள்.
ஆகவே அவளை அவன் எதுவும் செய்யவில்லை.
"அண்ணா! அம்மா தேடும்" - அவள் வாயிலிருந்து முத்துகள் உதிர்ந்தன.
முருகன் நினைவு கலப்பைக்கட்டை மேல் திரும்பியது.
0
Comments
Post a Comment